Saturday, May 28, 2022

தமிழ்நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கங்கள் TNPSC Notes

 சாதி எதிர்ப்பு இயக்கங்கள் 



ஜோதிபா பூலே 

  • ஜோதிபா பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார்.

  • மகாராஷ்டிரத்தில் விதவைகள் மறுமண இயக்கத்திற்கு முன்னோடியாக அவர் செயல்பட்டார். பெண் கல்விக்காகவும் பாடுபட்டார்

  • ஜோதிபா கோவிந்தா பூலே மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து 1852ல் பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளியை நிறுவினர்.

  • சத்ய சோதக் சமாஜம் (உண்மை தேடும் சங்கம்) என்ற அமைப்பை 1873இல் நிறுவினார்.

  • இதுவரை விவாதிக்கப்பட்ட இயக்கங்கள் பெரும்பாலும் மேல்சாதியாகக் கருதப்பட்ட சமூகங்களின் மேல் அதிக கவனம் செலுத்தின. ஆனால் சில குறிப்பிட்ட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கின

  • அவற்றுள் மிக முக்கியமான இயக்கம் ஜோதிபா பூலேயின் சத்ய சோதக் சமாஜமாகும். ஜோதிபா பூலே மாலி (தோட்ட வேலை செய்வோர்) சமூகத்தைச் சேர்ந்தவராவார்

  • 1827இல் பிறந்த அவர்  தொடக்கக் கல்வியைக் கிறித்தவ சமய நிறுவனப் பள்ளியில் கற்றார்இடையில் கல்வியைத் தொடர முடியாமல் 1833ல் நின்றுவிட்டார்.

  • ஜோதிபா பூலே மேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தாகத்தினால் வேதங்கள், மனுசங்கிதை, புராணங்கள், புத்தர், தீர்த்தங்கரர் ஆகியோரின் கருத்துகள், இடைக்கால பக்தி இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோர்கள் என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார்.

  • மேற்கத்திய சிந்தனைகளோடும் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார்

  • சமத்துவக் கொள்கை என்பது ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக் கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க கோரியது

  • அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளில் அவர் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார் .

  • சாதி முறையானது பிராமணர் அல்லாதோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் சமத்துவமின்மை, சமூகத் தாழ்வு நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் புரட்சி செய்ய ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொள்ளச் செய்தார்.

  • மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும் என்று கூறினார்

  • இவர் எழுதிய முக்கிய நூல்குலாம்கிரி’ (அடிமைத்தனம்) என்பதாகும்.

  • சமூகத்தில் பெண்களும் வறுமையில் உழல்வோரும் நசுக்கப்பட்டோருமே மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஏனைய வர்க்கங்களின் விடுதலையோடு இணைந்துள்ளது என்று வாதிட்டார்

  • வர்க்கங்களுக்கிடையேயான சமத்துவம் மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை முன் வைத்தார்.

  • திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும்படி கூறினார்.

  • பூலே தன்னுடைய கருத்துக்களை உண்மையான போராட்டங்களாக மாற்ற விரும்பினார். மக்களுக்குக் கட்டாய தொடக்கக் கல்வியை விவசாய வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்குமாறு ஆங்கில அரசாங்கத்தைப் பூலே வற்புறுத்தினார்.

  • தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும் நிறுவினார்

  • தாழ்த்தப்பட்டோரின் நிலையை மேம்படுத்த தன்வீட்டின் அருகிலேயே குளம் அமைத்து தாழ்த்தப்பட்டோர் நீர் எடுத்து பயன்படுத்துமாறு செய்தார்.

  • அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து, சாதியை மறந்து உணவு உண்ணுதலை (சமபந்தி) விரும்பினார்.

  • பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது.

பண்டித ரமாபாய் (1858-1922)

  • பண்டித ரமாபாய் (1858-1922) இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராவார். சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  • சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்குபண்டித்’, ‘சரஸ்வத்எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் ரமாபாயும் அவருடைய சகோதரரும் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டனர்

  • 1878இல் அவர்கள் கல்கத்தா சென்றனர். இரண்டாண்டிற்குப் பின்னர் அவருடைய சகோதரரும் காலமானார். 1880இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.

  • அக்காலத்திலேயே வேற்று சாதியைச் சேர்ந்த வேற்றுமொழி பேசக்கூடிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் நெஞ்சுரம் அவருக்கிருந்தது.

  • இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்.

  • 1882இல் 300 பெண்கள் இவ்வமைப்பில் கல்வி கற்றனர்.

  • ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காகசாரதா சதன்’ (வீடற்றவர்களுக்கான இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார்

  • வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார். அங்குமுக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார்.

  • விரைவில் அந்த வீட்டில் 2000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இருந்தனர். அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.

ஸ்ரீ நாராயண குரு (1854- 1928)

  • கேரளத்தில் தோன்றிய புகழ் பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு ஆவார்.

  • கேரளத்தை மையமாகக் கொண்ட இந்த, ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தாருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளிலிருந்து தோன்றியது.

  • இவ்வியக்கத்தை தோற்றுவித்த ஸ்ரீநாராயணகுரு, கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண்ட கேரளத்து ஈழவ சமூக இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கினார்

  • ஈழவர்கள் கேரள மக்கள் தொகையில் தனிப்பெரும்பான்மையாக 26 விழுக்காடு உள்ளனர்

  • ஸ்ரீ நாராயண குரு 1902இல்ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayana Guru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார். அவர் மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்.

  • இவ்வமைப்பு

  1. பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை

  2. அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்

  3. சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை

  4. அரசியல் பிரதநிதித்துவம், போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது

  • இவ்வியக்கம் சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல், பாரம்பரியமான அதிகார விநியோகமுறையில் மாற்றம், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப் புகளை ஒருங்கிணைத்துப் பெருவடிவிலான சம்மேளனமாக மாற்றுதல் போன்ற கூட்டமைப்பு மாற்றங்களைக் கொணர்ந்தது.

  • கோவில்களுக்குள் ஈழவர்கள நுழைவதற்கிருந்த தடைகளுக்கு எதிராக ஸ்ரீநாராயண குரு அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை நிறுவியதோடு ஈழவ சமூகம் தன்னைத்தானே நவீனப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சக்தி கொண்டதாக மாற்றினார்.

  • இவர் விலங்குகளை பலிகொடுத்தல், சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற சமூகக்கொடுமைகளை கண்டித்தார்.

  • கவிஞர் குமரன் ஆசான், டாக்டர் பல்பு, சகோதரன் ஐயப்பன் போன்ற மகத்தான ஆளுமைகள் இவ்வியக்கத்திலிருந்து தோன்றி, கேரளச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தினர்

  • அவர் வைக்கம் சத்யாகிரகத்தில் நேரடியாகப் பங்கு பெறாவிட்டாலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் நுழைவதற்கான தடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தார். அவை எதிர்கால கோவில் நுழைவு இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.

அய்யன்காளி (1863-1941)

  • அய்யன்காளி 1863இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும்.

  • குழந்தையாய் இருக்கும்போதே அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது. பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம் பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்

  • ஆடை அணிவது உட்பட, பல மரபுசார்ந்த பழக்கங்களை அவர் எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டும் மறுக்கப்பட்ட, உயர்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார்.

  • உயர்சாதியினர் பயன்படுத்தியதும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்ததுமான பொதுச் சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப்பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்.

  • ஸ்ரீ நாராயண குருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் – Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார். கீழ்சாதியாகக் கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூகமக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம் நடத்தி நிதிதிரட்டியது.

இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்

  • 1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின

  • 1857 எழுச்சிக்கு முஸ்லிம்களே காரணம் என்று ஆங்கிலேயர் சந்தேகித்த நிலையில், முஸ்லிம்களும் காலனிய நவீனத்துவம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீடுகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தனர்

  • இதன் விளைவாக முஸ்லீம்கள் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியிருந்தனர்.

  • இச்சூழலில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கிடையே சில சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.

சர் சையத் அகமத்கான்

  • கல்வி, அரசுப்பணிகள், தேசிய அளவில் தலைமை வகித்தல் ஆகியவற்றில் தங்கள் இடங்களைப் பெரிதும் இழந்துவிட்ட இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டுமானால் ஆங்கிலக்கல்வியை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று புரிந்துகொண்டனர்.

  • இப்புரிதலுக்கு உயிரும் உணர்வும் கொடுத்தவரே சர் சையத் அகமத்கான் (1817-98). டெல்லியில் உயர் குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார்.

  • மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார்

  • அறிவியல் கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்

  • மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார்

  • எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும் படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.

அலிகர் இயக்கம் (1875)

  • அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் சர் சையத் அகமதுகான் (1817-98) ஆவார். முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக இது தோற்றுவிக்கப்பட்டது

  • இடைக்காலத்திய பிற்போக்குத் தன்மையை போக்கி, சமயத்தில் முற்போக்கு சிந்தனைகளை அவர் ஏற்படுத்தினார்.

  • மேற்கத்திய அறிவியல் கல்விக்கும் குரானின் போதனைகளுக்குமிடையே ஒத்திசைவை ஏற்படுத்த அவர் விரும்பினார்

  • அலிகர் இயக்கத்தின் கொள்கைகள்:

  1. முஸ்லீம்கள் இஸ்லாமின் மேல்கொண்டிருக்கும் பற்றினைப் பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்

  2. பர்தா முறை, பலதார மணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்தது

  • அவருடைய முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய பத்திரிகையான தத்கிப் ஒல்-அக்லுக் (பழக்க வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும் மேம்படுத்துதல்) மூலம் பரப்பப்பட்டது

  • இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறினார்.

  • இயற்பியல், அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூலமும், இருமொழிப் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலமும், மேற்கத்திய அறிவியலை அறிமுகம் செய்வதற்காக 1864இல் அவர் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார்

  • அதே ஆண்டில் காஜிப்பூரில் நவீனப் பள்ளியொன்றை நிறுவினார்

  • 1868இல் முஸ்லிம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.

  • 1869-1870இல் அவர் ஐரோப்பா சென்றபோது இந்திய முஸ்லிம்களுக்காக ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் என்ற தனது வாழ்நாள் பணிக்கான திட்டத்தை உருவாக்கினார்.

  • முஸ்லிம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக 1875இல் அலிகாரில் ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார். இதுவே 1877இல் முகமதியன் ஆங்கிலோ -ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிபெற்றது. அவருடைய மறைவிற்குப் பின்னர் 1920ல் இக்கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது

  • இதுவே முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கும்மையமாகத் திகழ்ந்தது.

  • இந்திய முஸ்லிம்களிடையே தாராளவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக 1886இல் சையது அகமது கான் ஆங்கிலோ ஓரியண்டல் கல்வி மாநாட்டை (Anglo Oriental Educational Conference) தொடங்கினார்

  • சமயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார். மாறிவரும் காலச் சூழலுக்கேற்றவாறு பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிச்சத்தில் குரானில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றார்

அகமதியா இயக்கம் (1889)

  • 1889இல் மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஒரு மாறுபட்ட கோரிக்கை ஏற்படுத்தியது.

  • குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது கூற்று மதத்திற்கு எதிரானது என மைய நீரோட்ட இஸ்லாமியர் கருதினர்.

  • ஆனாலும் பலர் அவருடைய கொள்கைக்கு மாறினர். அவருடைய முக்கியப் பணி ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர்கொண்டு மறுத்ததாகும்

  • சமூக நெறிமுறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டதுடனே பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.

தியோபந்த் இயக்கம் (1866)

  • தியோபந்த் இயக்கம் முஸ்லிம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்த உலேமாக்களால், மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. அவை:

  1. குர்ஆன் மற்றும் ஹாடிஸில் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது மற்றும்

  2. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உரிமைப் போராட்டத்தை தொடர்வது

  • இவ்வியக்கம் நிறுவன வடிவம் பெற்று சகரன்பூருக்கு அருகேயுள்ள தியோபந்த் என்னுமிடத்தில் முகமது காசிம் நாநோதவி (1833-77) மற்றும் ரஷித் அகமத் கங்கோரி (1828-1905) ஆகியோரால் முஸ்லிம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது

  • அவர்கள் 1866இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக் கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது. உண்மையான இஸ்லாமிய மதம் இப்பள்ளியில் கற்றுத்தரப்பட்டது.

  • அலிகர் இயக்கத்தின் நோக்கங்களான மேலைக் கல்வியின் மூலம் முஸ்லிம்களின் நலனை மேம்படுத்துதல், ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தல் ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தாரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே.

  • மௌலானா முகமத்-உல்-ஹசன் (1851-1920) தியோபந்தின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத் -உல்-உலேமா (இறையியலாளர்களின் அவை) ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்லீம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.

  • வாலி அல்லா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த இறையியலாளர்களால் 1867இல் தியோபந்த்தில் இறையியல் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது

  • அவர்களுள் மிக முக்கியமானவர் முகமது காசிம் நாநோதவி ஆவார். கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களும், ஆரிய சமாஜமும் முன்வைத்த வாதங்களுக்கு எதிர்வாதங்கள் வைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

  • இவ்விறையியல் கல்லூரியின் மிக முக்கியமான நோக்கம் பழமைவாதிகளுக்கு இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கும் இறையியலாளர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, சமய, இறையியலை மீள்வாசிப்பு செய்யவை என்பனவாகும்.

  • ஒரு சமயப் பல்கலைக்கழகமாக தியோபந்த், முஸ்லீம் இந்தியாவில் மட்டுமல்லாமல் முஸ்லீம் உலகத்திற்கே பெருமதிப்புமிக்க நிறுவனமாயிற்று.

  • அரசியல் களத்தில், தியோபந்த் பள்ளி 1885இல் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது. 1888இல் தியோபந்த் உலேமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளானதி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன் (The United Patriotic Association), ‘முகமதன் ஆங்கிலோ - ஓரியண்டல் அசோசியேஷன்’ (The Mohammedan Anglo-Oriental Association) ஆகியவற்றிற்கு எதிராக சமய ஆணையைப் (fatwa) பிறப்பித்தது

பார்சி சீர்திருத்த இயக்கங்கள்

  • தங்கள் தாயகமான பாரசீகத்தில் அடக்குமுறைக்கு உள்ளானதால் ஜொராஸ்டிரியர்கள் பத்தாம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர்

  • ஒரு வணிக சமூகமாக அவர்கள் நூற்றாண்டுகளின் போக்கில் செல்வச் செழிப்படைந்தனர்

  • நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட அச்சமூகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்தக் காற்று தழுவத் தவறவில்லை.

  • 1851ல் பர்துன்ஜி நௌரோஜி மற்றும் எஸ்.எஸ். பெங்காலி என்பவர்களால் பம்பாயில் பார்சி சமய சீர்திருத்த சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

  • 1851இல் கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானதுரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (Rahnumai Mazdayasnam Sabha, சமய சீர்திருத்த சங்கம்) எனும் அமைப்பைப் பார்சிகளின் சமூகநிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கங்களுடனும் உருவாக்கியது

  • இவ்வியக்கம் பர்துன்ஜி நௌரோஜி, தாதாபாய் நௌரோஜி, K.R. காமா மற்றும் பெங்காலி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டிருந்தது.  

  • சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) எனும் செய்தித்தாளும் வெளியிடப்பட்டது.

  • பெண் கல்வியை அவர்கள் ஆதரித்தனர்

  • தங்கள் சமூகத்தில் நிலவிய திருமண சடங்குகளில் சீர்திருத்தம் கொண்டுவர அவர்கள் விரும்பினர்

  • ஜகத் மித்ராஎன்ற மாத இதழை நௌரோஜி நடத்தி வந்தார்.

  • பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பவர் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்

  • இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது. அவர்கள் தொடக்ககால காங்கிரசில் முக்கியப் பணியாற்றினர்.

  • பார்சிகளின் மத நடவடிக்கைகளும் சடங்குகளும் சீர்திருத்தப்பட்டன. பார்சி மதத்திற்கு மறு விளக்கமும் தரப்பட்டது

  • சமூகத் தளத்தில் பார்சி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காகக் கல்வி கற்பித்தல், பர்தா முறையை நீக்குவது, திருமண வயது வரம்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  • படிப்படியாகப் பார்சிகள் இந்திய சமூகத்திலேயே அதிக அளவு மேற்கத்தியமயப்பட்ட பிரிவினராக மாறினர்

  • தேசிய இயக்கத்திலும் இந்தியாவைத் தொழில்மயம் ஆக்கியதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

சீக்கிய சீர்திருத்த இயக்கங்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலெழும்பிய பகுத்தறிவு முற்போக்கு அலைகள் சீக்கியரையும் தொட்டுத் தழுவின

  • 1873இல் சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது

  • நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்.

  • கிறித்தவச் சமயப்பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு இயக்கவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்வது.

  • 1892ல் அமிர்தசரசில் கால்சா கல்லூரி நிறுவப்படுவதற்கு இந்த சபாக்கள் உறுதுணையாக இருந்தன

  • குருமுகி மற்றும் பஞ்சாபி இலக்கியத்தை இவை ஆதரித்தும் போற்றின.

  • சிங்சபா அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்

  • அகாலி இயக்கம் சீக்கிய குருத்வாராவை ஊழல் மிகுந்த உதாசி மகந்த் என்றறியப்பட்ட மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது

  • அரசு 1922இல் சீக்கியர் குருத்துவாரா சட்டத்தை (1925 திருத்தப்பட்டது) இயற்றியது. அதன்படி சீக்கிய குருத்துவாரா, சிரோன்மணி குருத்தவாரா பிரபந்தக் கமிட்டி எனும் அமைப்பின் கீழ் வந்தது.

  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்

  • சிலை வழிபாடு, சிலை வழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின

  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.

  • பாபாராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம்தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமயச் சீர்திருத்த இயக்கமாகும்.

  • நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது

  • வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார்

  • இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது. விதவை மறுமணத்தை ஆதரித்தது

  • வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.

கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள் 

  • இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர்களைப் போலவே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்திய மக்களின் மத விஷயங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது

  • போர்த்துகீசியரின் கட்டாய மதமாற்ற முயற்சிகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமென அவர்கள் நம்பினர்

  • அதன் விளைவாகக் கம்பெனி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமயப்பரப்பாளர்கள் நுழைவதற்கு தடைவிதித்திருந்தது

  • 1793 இல் பாப்டிஸ்டுகளான வில்லியம் கேரி, ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர்.

  • சமயப்பரப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் டேனியர்களுக்குச் சொந்தமான கல்கத்தாவிற்கு வடக்கேயுள்ள செராம்பூரில் தங்கினர்

  • கேரி, வேறு இரு சமயப் பரப்பாளர்களான ஜோசுவா மார்ஷ்மேன், வில்லியம் வார்டு ஆகியோருடன் இணைந்து 1799இல் செராம்பூர் மிஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தினர்.

  • செராம்பூர் மதப் பரப்பாளர்களே முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப்பணியாளர்கள் (Evangelical Babtist) ஆவர்

  • இவர்களைத் தொடர்ந்து சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர்

  • செராம்பூர் மதப்பரப்பாளர்களின் வருகைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல கிறித்தவ மதப்பரப்பு நிறுவனங்கள் போர்த்துகீசியருக்குச் சொந்தமான கோவாவிலும், மலபார் கடற்கரைப் பகுதிகளிலும், சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளிலும் செயல்பட்டன

  • மதமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. விரிவான, பெருமளவிலான மதமாற்ற நடவடிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கின

  • மதப்பரப்புக் குழுவினர், சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர். அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர்

  • பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமயப்பரப்புக் குழுவினர் போராடினர்

  • அனாதைக் குழந்தைகளையும் ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்கவைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் பஞ்சங்களின்போது சமயப்பரப்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

  • தங்குமிடம் வழங்கி உதவி செய்யும்போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது

  • பஞ்சக் காலங்களில் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் கிறித்தவ மதத்தைத் தழுவின

  • இதைப்போன்ற சூழலில் ஆந்திராவில் மாலா, மடிகா சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் மதம் மாறினர்

  • கம்பெனி அரசு இந்தியர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதில் சிறு முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டது

  • நீண்ட காலத்திற்கு உள்ளூர் மக்களுக்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பைக் கிறித்தவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்டன.

  • மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டியதாகும்

சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம் 

  • சமூகத்தின் வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால், சமய-சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவியல் சித்தாந்த எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • இதன் விளைவாகச் சீர்திருத்தவாதிகள் தூற்றப்பட்டனர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களுக்கு எதிராக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, பிற்போக்குவாதிகளால் கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

  • இருந்தபோதிலும் எதிர்ப்புகளை மீறி இவ்வியக்கங்கள், அச்சத்தின் காரணமாக இணங்கிச் சென்ற தனிமனிதர்களின் விடுதலைக்குப் பங்களிப்பைச் செய்தன

  • சமய நூல்கள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டமை, சமய நூல்களில் காணப்படும் கருத்துகளுக்குப் புதுவிளக்கம் அளிக்கும் உரிமை, சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டமை ஆகியன இறைவழிபாட்டைத் தனிப்பட்ட அனுபவமாக மாற்றின

  • சிந்திக்கவும் பகுத்தறியவும் தெரிந்த மனித அறிவின் திறமைக்குச் சீர்திருத்தவாதிகள் முக்கியத்துவம் கொடுத்தனர்

  • சமய நடவடிக்கைகளிலிருந்த ஊழல்களைக் களைந்து தங்கள் சமூகமும் மதமும் கீழானவை, பின்தங்கியவை என்ற குற்றச்சாட்டுக்கும், பழிப்புரைக்கும் எதிராகப் பதில் தர தங்களைப் பின்பற்றுவோர்க்கு சீர்திருத்தவாதிகள் உதவினர்

  • உருவாகி வந்த மத்தியதரவர்க்கம் பற்றிக் கொள்வதற்கான பண்பாட்டு வேர்களை இவ்வியக்கங்கள் வழங்கின.

சீர்திருத்த இயக்கங்களின் விளைவு

  • ராஜா ராம்மோகன் ராய் 1814 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றினார். பல பள்ளிகள் மற்றும் கல்கத்தா கல்லூரியை நிறுவினார்.

  • கல்வி மற்றும் கலாச்சார மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதோடு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உணர்வு மேம்பட்டது.

தமிழ்நாட்டில் சீர்திருத்தங்கள்

  • வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.

  • பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன.

  • கேசவ சந்திர சென் சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார். ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.

இராமலிங்க சுவாமிகள் (1823-1874) 

  • வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1823ஆம் ஆண்டு பிறந்தார்.

  • 19ஆம் ஆண்டு தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

  • தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார்.

  • முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார்.

  • தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.

  • இவர் ஆன்மீகத்தில் கொண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன.

  • ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

  • இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிடையே சமய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தினார். கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்ததோடு, ‘இறைவன் ஜோதி வடிவானவன்என்றும் அருட்பெரும் ஜோதியாகஇருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்

  • அவருடைய காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

  • இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன

  • தன்னை பின்பற்றுபவர்களை ஒழுங்கமைக்கவும், அது முற்றிலும் மதச்சார்பற்றதாக இருப்பதை உறுதிசெய்யவும் 1872 ஆம் ஆண்டில் அவர் சத்ய ஞான சபையை (உண்மையான ஞான மன்றத்தின் மண்டபம்) நிறுவினார்.

  • இதனால் வைதீக சைவ சமயத்தினர் இவர்பால் வெறுப்புக் கொண்டனர் இதனால் நிறுவனபடுத்தப்பட்டிருந்த சைவ அமைப்புகளோடு அவர் மோதல் துவங்கியது. இவருடைய சீடர்கள் அவருடைய பாடல்களைத் திரட்டித்திருவருட்பா’ (அருளின் பாடல்கள்) எனும் பெயரில் 1867இல் வெளியிட்டபோது மோதல் உச்சத்தை எட்டியது

  • இலங்கையைச் சேர்ந்த வைதீக சைவர்கள் சீர்திருத்தவாதி ஆறுமுக நாவலரின் தலைமையில் இதைத் தெய்வநிந்தனை எனக் கூறி இவருக்கு எதிராக கட்டுரை எழுதும் போரில் ஈடுபட்டனர்.

  • அடிகளார் பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தார். சாதி- சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றும் பாடுபட்டார்.

  • வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையாலம் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார்

  • ஆகவே, மனிதர்களிடத்து மட்டுமன்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையேஜீவ காருண்யம்” (உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்) என்று அழைக்கிறோம்

  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்எனக் கூறிய அடிகளார், தான் உயிர்களிடத்து எவ்வாறு அன்பு கொண்டிருந்தார் என்பதை அறிகிறோம்

  • சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்

  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

  • பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார்.

  • ஏழைக்கு உணவு அளிப்பதே சிறந்த வழிபாடு என உறுதியாக நம்பினார்.

  • 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.

  • சத்திய தருமசாலையின் தொடக்க நாளன்று அடுப்பிற்கு தீமூட்டி, இந்தத் தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கட்டும். சத்திய தருமசாலையின்  தொடக்க நாளில், அவர் பற்ற வைத்த நெருப்பு இன்றும் உயிரோடு ஏழைகளுக்கு உணவளித்து கொண்டு இருக்கிறது.  

  • அப்பொழுதுதான் ஏழைகளுக்கு எப்பொழுதும் உணவு அளிக்க முடியும் என உறுதியுடன் கூறினார். இவர் மேற்கொண்ட உறுதி மொழிக்கு ஏற்றவண்ணம் ஆண்டு முழுவதும் சாதி-சமய வேறுபாடின்றி அனைவருக்கும் இன்றும் உணவளித்து வருகிறது

  • மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழிஎன்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும்

  • கடவுள், கருணை மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கின்றார்

  • ஆகவே கடவுளை அடையும் வழி உயிர்களிடத்து காட்டும் கருணையும், இரக்கமும் ஆகும் என்று குறிப்பிட்டார்

  • அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவசமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளைமதிப்பிழக்கச் செய்தன

பௌத்தத்தின் மீட்டுருவாக்கமும் அயோத்திதாசப் பண்டிதரும் 

  • பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது.

  • ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர்பெறத் துவங்கியது.

  • சீவகசிந்தாமணி (1887), மணிமேகலை (1898) ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதராவார்.   

  • பண்டிதர் அயோத்தி தாசர் (1845-1914) ஒரு தீவிரத் தமிழ்அறிஞரும் சித்தமருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.

  • சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். சரளமாகப்பேசக் கூடியவர்.

  • சமூக நீதிக்காக இயக்கம் நடத்திய அவர்இ சாதியத்தின் கொடிய பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறப் பாடுபட்டார்.

  • 1890களில் ஆதிதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார்.

  • தனது கருத்துக்களை மெய்ப்பிப்பதற்காகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பிறவற்றையும் மறுவாசிப்பு செய்தார்.

  • மக்கள் பௌத்தமதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார்.

  • பிரம்ம ஞான சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட் ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்.

  • அதே ஆண்டில் பௌத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமயத்தத்துவத்தைக் கட்டமைப்பதற்காகசாக்கிய பௌத்த சங்கம்எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்.

  • அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர். கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் இவரது கொள்கையைப் பின்பற்றினர்.

  • இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கியப்பங்கு வகித்தனர்.

  • சாதிகளற்ற அடையாளத்தை நிறுவ முயன்ற அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினார்

  • கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாகக் கருதிய அவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தார்

  • ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார்.

  • 1882இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும்திராவிடர்க் கழகம்எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல்திராவிட பாண்டியன்எனும் இதழையும் தொடங்கினார்

  • திராவிட மகாஜனசபைஎன்ற அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.

  • அயோத்திதாச பண்டிதர் 1907 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி 1914 தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...